"பரியாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர றியவே மெத்த வீங்கிப்
பரியார மொருமாது பார்த்தபோது
பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
தேரையர்: ஆசானே, பெண்ணின் கர்ப்பத் தில் ஒரு சிசுவின் வளர்ச்சி முறைகளையும், உடலில் உறுப்புகள் தோன்றுவதையும் இன்று தமிழ்ச்சபையில் விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: ஆண்- பெண் இணைவினால், பெண்ணின் கர்ப்பப் பையில், ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து, பதினைந்து தினங்கள்வரை நீர்க்குமிழி போலிருக்கும்.
பதினைந்தாவது நாளில் அந்த நீர்க்குமிழி இந்த பூமி வடிவில் உருண்டு திரண்டு, ஒரு பிண்ட வடிவாக மாறும்.
ஒரு மாதத்தில் இந்த கருப்பிண்டம் திட நிலையை அடையும்.
இரண்டாவது மாதத்தில் கருப்பிண்டத் தில் முதன்முதலில் தலையும், அதனுள் மூளையும் உருவாகும்.
மூன்றாவது மாதத்தில் கால்களும் கைகளும் உருவாகும்.
நான்காவது மாதத்தில், கர்ப்பத்தில் வளரும் குழந்தையைச் சுற்றி மெல்லிய சவ்வினால் குடம் போன்ற அமைப்பில் ஒரு வீடு கட்டப்படும். அதில் நீர் நிரம்பி, அந்தக் குழந்தையின் தலை மேலேயும், கால்கள் கீழேயும் இருக்கும் நிலையில் அந்த சிசு வளரும். சவ்வினாலான இந்த வீட்டை "பனிக்குடம்', "நீர்ப்பை' என்று கூறுவார்கள்.
இந்த பனிக்குடம் உருவாகும் நாட்களில் தாய் உண்ணும் உணவுகள் வயிற்றுக்குள் செல்லமுடியாமல் தடை ஏற்படுவதால் அது வாந்தியாக வெளியே வந்துவிடும். இந்த வாந்தி உண்டாகும் காலத்தை "மசக்கைப் பருவ காலம்' என்று கூறுவார்கள்.
இந்த நான்காவது மாத காலத்தில்தான் தொப்புள்கொடி உருவாகி குழந்தையின் உடலைச் சுற்றி வளர்ந்து, அந்த தொப்புள் கொடி தாயின் சுவாசக்குழாய், உணவுக்குழாயுடன் இணைந்தவுடன், தாய்க்கு வாந்தி நின்றுவிடும். இதற்குமேல் தாயின்மூலம் உணவும், சுவாசமும் கிடைக்கப்பெற்று, ரத்தம் உருவாகி சிசுவின் உடலில் ரத்த ஓட்டம் உண்டாகும்.
ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கு முதுகெலும்பு, விலா எலும்புகளும், நரம்புகளும் உண்டாகும்.
ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு முகம் உண்டாகி, அதில் கண்கள், காதுகள், மூக்கு, வாய் என உறுப்புகள் உண்டாகும்.
பெண்கள் கருத்தரித்த ஏழாவது மாதத்தில், தாயின் சுவாசக்காற்றுமூலம் குழந்தையின் உடலில் உயிர்க்காற்று பிரவேசித்து செயல்படத் தொடங்கும். தாய் தன் சுவாசம்மூலம் தன் குழந்தைக்கு உயிரைத் தருகிறாள். இது குழந்தைக்குக் கிடைக்கும் முதல் உயிர்.
இந்த ஏழாவது மாதத்தில் குழந்தையின் தாய்- தந்தை, வம்ச முன்னோர்களில் இறந்துபோன சிலரின் ஆத்மா, ரத்த சம்பந்தமான உறவு உரிமையால் இந்தக் குழந்தைமூலம் மறுபடியும் இந்த பூமியில் பிறந்து, தாங்கள் முற்பிறவிகளில் தன் குடும்பத்தாருக்குச் செய்த பாவ- சாப- புண்ணியப்பதிவுகளை அனுபவித்துமுடிக்க, இக்குழந்தையைத் தேர்ந்தெடுத்துப் பிரவேசிக்கும்.
வம்ச முன்னோரின் ஆத்மா குழந்தையின் உடலில் நுழைந்தவுடன், அந்த முன்னோரின் உருவச்சாயல் குழந்தைக்கு வரும். உடலுறுப்பு கள், முகத்தோற்றம், குணம் என முன்னோர் களின் ஆதிக்கம் குழந்தைக்கு ஏழாவது மாதத்தில்தான் உருவாகும்.
ஒரு ஆத்மா (மனிதன்) எத்தனைப் பிறவியெடுத்தாலும், அவர் முதலில் எந்த விந்து, எந்த குடும்பத்தில் பிறந்தாரோ, அதே குடும்பத்தில், அந்த வம்சத்தில்தான் விந்து சுழற்சியால் பிறவி முடியும்வரை பிறப்பார். v ஒரு குடும்பத்தில் பாட்டன் பேரனாகப் பிறப்பான். பேரன் முற்பிறவியில் பாட்டனா கப் பிறந்திருப்பான்.
ஏழாவது மாதத்தில், குழந்தையின் உடலில் உயிர்க்காற்றும், முன்னோர்களின் ஆத்மாவும் நுழைந்தவுடன், "இனி நாம் தாயிடமிருந்து பிரிந்து பூமியில் பிறந்து, தன் முற்பிறவி கர்மவினைகளையும், வம்ச முன்னோர்களின் கர்மவினைகளையும் சேர்த்து அனுபவித்துத் தீர்க்கவேண்டும்' என்ற எண்ணம் தோன்றி, கர்ப்பப் பையில் மேல்பாகத்திலிருந்த தன் தலைப்பகுதியை, தாயின் யோனியின் வாசற்பகுதியை நோக்கித் தலைகீழாய்த் திருப்பி பூமியில் பிறக்கத் தயாராகிவிடும்.
இவ்வாறு குழந்தையின் தலைப்பகுதி தலைகீழாய்த் திரும்புவது தாய்க்கு உணர்வி னால் நன்கு தெரியும். இந்த ஏழுமாத வளர்ச்சி நிலையே "ஏழு பிறவிகள்' ஆகும்.
இந்த உண்மையை அறியாமல், ஒரு மனிதன் ஏழு பிறவிகள் பிறந்து, ஏழாவதாகப் பிறக்கும் கடைசிப் பிறவிதான் பிறவி முடிந்த நிலை; இனி பூமியில் பிறப்பில்லை என கூறுகிறார்கள். இது உண்மையல்ல.
சித்தர் பெருமக்களே, ஒரு மனிதன் தன் முற்பிறவி கர்மவினைகளைத் தீர்த்து முடித்து, பிறவியை முடிப்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல; எளிதல்ல.
இந்த பூமியில் மோட்சப் பிறவிகளாக, கடைசிப் பிறப்பைப் பிறந்து வாழும் மனிதர் களையும், அவர்களின் அடையாளத்தையும் பின்னர் தமிழ்ச் சபையில் விளக்கமாகக் கூறுகிறேன்.
ஏழாவது மாதத்தில் குழந்தையின் தலைப்பாகம் தலைகீழாய்த் திரும்பும்போது, தொப்புள் கொடி முறையாக வயிற்றைச் சுற்றிவராமல், சில குழந்தைகளுக்கு வயிற்றுக்கு மேலே கழுத்தைச் சுற்றியோ, நெஞ்சினைச் சுற்றியோ வளரும். இது தாயின் பிரசவ சமயத்தில், குழந்தை வெளியேவர சிரமத்தை ஏற்படுத்தும்.
தாயின் கர்ப்பத்தில் இயற்கையாக ஏற்படும் இந்த நிகழ்வைக்கூட சிலர் "குழந்தை கொடிசுற்றிப் பிறந்துள்ளதால் கோத்திரத்தாகாது', "மாலை சுற்றிப் பிறந்த தால் மாமனுக்கு ஆகாது' என எதையாவது கூறி, பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். இது இயற்கையான, எதேச்சையாக நிகழும் நிகழ்வுதான். இதுபோன்று பிறந்த குழந்தை களால் யாருக்கும் எந்த தோஷமும், தீங்கும் ஏற்படாது.
இனி பிறப்பின் நிலைபற்றி தொடர்ந்து அறிவோம்...
ஒரு குழந்தை தந்தையிடம் உருவாகி, அவன் விந்தில் 27 நட்சத்திர நாட்கள் வளர்ந்து, தாய்- தந்தை உறவால் தாயின் கர்ப்பத்தில் சேர்ந்து, தாய் கருத்தரித்த நாள்முதல் 270 நட்சத்திர நாட்கள் கர்ப்பத்தில் வளர்ந்து இந்த பூமியில் பிறக்கிறது. ஒரு குழந்தையின் மொத்த கர்ப்பவாச காலம் 297 நாட்களாகும்.
(சித்தர்கள் கூறிய தமிழ்முறை மாத, வருடக் காலண்டர் கணக்கீடுபடி, 27 நட்சத்திர நாட்களே ஒரு மாதக் கணக்காகும். 270 நாட்களே ஒரு வருடக் கணக்காகும். ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் வாசம் செய்யும் காலமே சித்தர்கள் ஒரு வருடமாகக் கணக் கிட்டுள்ளார் கள்.)
கரு உருவாகி, 8, 9-ஆவது மாதங்களில் குழந்தையானது, "ஐயோ, எனது முற்பிறவியில் என் தாய், தந்தையைக் காப்பாற்றாமல், பெற்ற பிள்ளையை கவனியாமல், கட்டிய மனைவியைக் கஷ்டப்பட வைத்து, சகோதரர் கள் சொத்துகளை ஏமாற்றி அபகரித்து, இன்னும் இதுபோன்ற பாவங்களை- துரோகங்களைச் செய்து வாழ்ந்தேனே. இப்பிறவியில் நான் செய்த அந்த பாவங்க ளுக்கு, அந்த உறவுகள்மூலமே தண்டனையை அனுபவித்துத் தீர்க்கவே பிறக்கிறேன்' என்று மனதில் எண்ணி துக்கித்துக்கொண்டிருக்கும்.
தாய் கருத்தரித்த 270-ஆவது நாளில், தாயிடமிருந்து விலகி, தன் முற்பிறவி வினைகள், வம்ச முன்னோர்களின் கர்மவினைகளைச் சுமந்துகொண்டு குழந்தை பூமியில் பிறக்கும். இதனையே பெண்களுக்கு "பேறுகாலம்' என்று கூறுவார்கள்.
சிலர், "நாம் எதைக் கொண்டுவந்தோம்; மரணம் அடைந்தபின் எதைக் கொண்டு போகப் போகிறோம்' என்பார்கள். ஒரு மனிதன் இந்த பூமியில் பிறக்கும்போது தான் முற்பிறவிகளில் செய்த கர்மவினைப் பதிவுகளைத் தன்னுடன் கொண்டுவருகிறான்.
இறந்துபோகும்போது, இப்பிறவியில் செய்த பாவ- சாப- புண்ணியப் பதிவுகளைச் சுமந்து கொண்டு பூமியைவிட்டுச் செல்கிறான்.
ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து, இந்த பூமியில் பிறக்கும்வரை, மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் நேரடித் தொடர்பின்றி இருக்கும். தாயின் பிறப்புறுப்பிலிருந்து அதன் தலைப்பாகம் வெளியே தெரியும் நொடிப்பொழுதில்தான் இந்த ஐந்து சக்திகளும், சிசுவின் தலைமூலம் முதன்முதலில் தொடர்புகொள்ளும்.
குழந்தைக்கு பூமியின் வெளிப்புற சக்தி தொடர்பு ஏற்பட்டவுடன், அந்தக் குழந்தை யின் முற்பிறவி நினைவுகளை மாயை மறைத்து, மறக்கச் செய்துவிடும். இந்தக் குழந்தை இப்போதுதான் முதல் பிறவியாக இந்த பூமியில் பிறந்ததுபோல் சயனித்திருக்கும். இதனையே அவரவர் தலையெழுத்தை அவரவரே அறியமுடியாமல் மறைக்கப்பட்ட நிலை, மாயையின் செயல் என்று கூறுகிறார்கள்.
ஒரு குழந்தை, தாயிடமிருந்து தொப்புள் கொடித் தொடர்பு அறுந்தவுடன், அது உயிரற்ற சடமாகவே அசைவின்றி இருக்கும். அந்த குழந்தையின் முற்பிறவியில் அதன் உடல் அழிந்ததும், அந்த உடலைவிட்டுப் பிரிந்துசென்ற உயிர்க்காற்று, மறுபடியும் இந்த குழந்தையைத் தேடிவந்து, குழந்தையின் தொப்புள் வழியாக, அதன் சரீரத்திற்குள் நுழைந்தபின்தான், அந்த குழந்தைக்கு உயிர் உண்டாகி, சரீர உறுப்புகள் செயல்படத் தொடங்கும்; அசைவு உண்டாகும்.
சித்தர் பெருமக்களே, நமது தாய் தனது கருமுட்டை, ரத்தத்தால்தான் நம்மை உருவாக்கி கர்ப்ப காலம், மசக்கை காலம், பேறுகாலம் என்று மூன்று காலநிலைகளில் எல்லா சிரமங்களையும் தான் ஒருத்தியாகவே அனுபவித்து நம்மைப் பெற்றெடுக்கிறாள்.
ஒரு குழந்தையைத் தன் கர்ப்பத்தில் தாங்கியது முதல் பெற்றெடுக்கும்வரை, தாய்க்கு வாழ்வா? சாவா என்ற மரணப் போராட்டம்தான்.
குழந்தையைப் பெற்றெடுத்தபின்பும், தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்க்கிறாள்.
ஒரு குழந்தையை உருவாக்குவதில் தந்தைக்கு அரை நாழிகை (12 நிமிடம்) நேரம்தான். ஆனால் தாய்க்கோ அவள் மரணமடையும் வரையில், தான் பெற்ற பிள்ளையைப் பேணிக்காக்கும் வாழ்வுதான். தான் பெற்ற பிள்ளைக்கு எவ்வளவு வயதானாலும் அவனைக் குழந்தையாகவே எண்ணி வாழ்பவள். தாயின் பெருமையைப் பூரண ஞானம்பெற்ற சித்தர்களாகிய நம்மாலும் கூறமுடியாது.
சித்தர்களாகிய நீங்களும், என் தமிழின மக்களும் இதனை உணர்ந்துகொள்ளுங்கள். தாயையும் தாய்மையையும் போற்றுங்கள். பெண்களை மதித்து வாழுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தாயே தெய்வம்.
பெற்ற தாயை, பெண்களை மதித்துப் போற்றி, வணங்கி வாழ்பவனை வம்சத்தில் உண்டான பெண் சாபங்கள் பாதிக்காது. முழுமையாக நிவர்த்தியாகிவிடும்.
மனிதப் பிறப்பு பற்றி மேலும் பல உண்மைகளை நாளை தமிழ்ச் சங்கத்தில் விளக்கமாகக் கூறுகிறேன். இன்று சபையை முடித்துவிடுவோம்.
"எப்படி யுலகில் இப்படி
யுருவானோம் சிங்கி- அது
அப்பன்தன் நட்புக்கு ஒப்பிய
தாயாலே சிங்கா.
இந்த வுடலுக் குயிர்வந்த
தெப்படிச் சிங்கி- அவர்
தொந்தி நடுக்குழி தொப்பூழ்
வழியடா சிங்கா.
முப்பொரு ளென்றுநீ முன்சொன்ன
தாரடி சிங்கி- அவர்
அப்பனு மாயிரம் நாதியாம்
நாமடா சிங்கா.
என்ன விதமாகத் தன்னை
யறிவது சிங்கி- அது
முன்னோர் தாய் தந்தை யாகிநா
மனது சிங்கா.
இந்த வுண்மையை யெப்படி
யறிவது சிங்கி- உன்
அங்கத் தைப்பார்த்து யறிந்து
கொள்ளடா சிங்கா.
(பீருமுகமது சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)